ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு
கோவிலை சேதப்படுத்தியதாக கூறி ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் கொளகாத்தம்மன் கோவில் சுமார் 30 ஆண்டு காலமாக உள்ளது. இந்த கோவில் தற்போது திருப்பணிகள் செய்ய பொதுமக்கள் முடிவு செய்யப்பட்டு, கோவில் கட்டுமானபணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார் உட்பட 5 பேர் கோவிலை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை கண்ட பொதுமக்களையும் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து நேற்று புதுமாவிலங்கை பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கடம்பத்தூர்-பேரம்பாக்கம் சாலையான புதுமாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ம.க.வின் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கே.என்.தாஸ் மற்றும் கடம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலை சேதப்படுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.பொதுமக்களின் சாலைமறியல் காரணமாக அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story