ரூ.29 கோடியில் கட்டப்பட்ட ஒதியம்பட்டு-திருக்காஞ்சி மேம்பாலம் - முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்
ரூ.29 கோடியில் கட்டப்பட்ட ஒதியம்பட்டு-திருக்காஞ்சி மேம்பாலத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
வில்லியனூர்,
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஒதியம்பட்டு-திருக்காஞ்சி இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கியின் உதவியுடன் ரூ.29 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மேம்பாலத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ஒதியம்பட்டு-திருக்காஞ்சி கிராமத்தை இணைக்கும் வகையில் 700 மீட்டர் தூரத்துக்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. காமராஜர் மணிமண்டபம், கடற்கரை சாலையில் மேரி கட்டிட பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இவை அடுத்த மாதம் (பிப்ரவரி) திறக்கப்படும். வ.உ.சி. புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. உப்பனாறு பாலம் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும். மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு குறைவான நிதியே கொடுத்து வருகிறது. இருந்தபோதிலும் மாநில அரசானது வங்கி மற்றும் நபார்டு நிதியின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேம்பாலத்தின் கீழ் தடுப்பணை மற்றும் கணுவாப்பேட்டை பகுதியில் இருந்து வரும் சாலையை பாலத்தில் இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலர் சுர்பீர்சிங், தலைமை பொறியாளர் மகாலிங்கம், பொறியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்த மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மட்டும் கலந்து கொண்டனர். மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story