வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை; அமைச்சர் கே.சி.வீரமணி அடிக்கல் நாட்டினார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை அமைக்க அமைச்சர் கே.சி்.வீரமணி அடிக்கல்நாட்டினார்.
ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை 45 கிலோ மீட்டர் தூரம் இருவழி சாலையாக உள்ள தேசிய நெடுஞ் சாலை ரூ.300 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றப்பட இருக்கிறது.
இதற்கான அடிக்கல்நாட்டு விழா ஜோலார்பேட்டையில், வாணியம்பாடி- திருப்பத்தூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்தது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு அடிக்கல்நாட்டி சிறப்புரையாற்றினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் சாலைப்பணிகளை தொடங்கிவைத்தார்.
அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
அரசியல் செய்தனர்
எதிர்க்கட்சியினர் இந்த சாலையை வைத்துதான் இதுவரை அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். இனிமேல் எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள்?. என்று கேள்வி எழுப்பினார். இந்த சாலையை சீரமைக்க பொது மக்களும், அரசியல் பிரமுகர்களும் பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது .
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன், ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கே.சி.அழகிரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சா.ரமேஷ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேவன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.வெள்ளையன், பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி.சுப்பிரமணி, திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி. குமார், நகர பாசறை செயலாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story