சேலம் சிவதாபுரத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு; வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலம் மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட சிவதாபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தமிழக அரசின் சார்பில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு 22-வது வார்டு அ.தி.மு.க. செயலாளரும், சொர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான கே.சி.செல்வராஜ் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அவர் பேசும்போது, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகமாக வசித்து வரும் சிவதாபுரம் பகுதியில் அம்மா மினி கிளினிக் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை. ஈ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்ன மருந்து, மாத்திரைகள் இருக்கிறதோ அவை அனைத்தும் அம்மா மினி கிளினிக்கிலும் கிடைக்கும். இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைவரும் நடைபெற உள்ள தேர்தலில் முழு ஆதரவு அளிக்க வேண்டும், என்றார்.
விழாவில், சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் பொன்னி பிரகாசம், 22-வது வார்டு ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் இளங்கோ, செந்தில், செல்வம், சதீஷ், அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story