செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தினவிழா 600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தினவிழா 600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2021 10:12 AM IST (Updated: 27 Jan 2021 10:12 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 600 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பேட்டை மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் 600 பேருக்கு ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் வழங்கினார். இதனையடுத்து 36 போலீசாருக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வாங்கினார்.

மாணவிக்கு பரிசு

செங்கல்பட்டை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி பிரசித்தி சிங் (வயது 7) பிரசித்தி வனம் என்ற காட்டையே உருவாக்கியுள்ளார். இவரது சமூக சேவை பணிக்காக பிரதமரின் பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த மாணவிக்கு கலெக்டர் ஜான் லூயிஸ் கேடயம் மற்றும் வாழை மரக்கன்றை பரிசளித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக இலவச வீட்டுமனை பட்டா 50 திருநங்கைகள் உள்பட 85 பேருக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர மோட்டார் சைக்கிள் 2 பேருக்கும் வேளாண்மைத்துறை சார்பில் எண்ணெய் பிழியும் எந்திரம் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் சார்பில் 6 பேருக்கு எந்திரங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் 4 பேருக்கு பசுமை வீடுகள் மகளிர் திட்டம் சார்பில் 3 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம், மகளிர் சுய உதவி குழுவுக்கான வங்கி கடன் வழங்குதல், மாவட்ட வழங்கல் அலுவலர் சார்பில் 170 பேருக்கு ரேஷன்கார்டுகளையும் கலெக்டர் வழங்கினார்.

காவல் உயர் பயிற்சியகம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு காவல் பயிற்சியக இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து 11-வது துணை போலீஸ் சூப்பிரண்டு பயிற்சி குழுவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். இதில் கூடுதல் இயக்குநர் என்.பாஸ்கரன், துணை இயக்குனர்கள் ஜெயலட்சுமி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story