சிவகங்கையில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்
சிவகங்கையில் குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
சிவகங்கை,
சிவகங்கையில் குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவையொட்டி 90 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி காலை 8 மணிக்கு விழா நடைபெறும் மைதானதிற்கு வந்தார்.அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் வரவேற்று அழைத்து வந்தார்.
காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது போலீஸ் பாண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ஆகியோர் வெண்புறாக்களையும், மூவர்ண கலரில் கட்டப் பட்ட பலூன்களையும் பறக்கவிட்டனர். அதன்பிறகு கலெக்டர் திறந்த ஜீப்பில் ஏறி சென்று போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்த இடத்திற்கு சென்று கலெக்டர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
இதை தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 126 பணியாளர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 354 பணியாளர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். விழாவையொட்டி 90 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 15 ஆயிரத்து 931 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மாவட்ட மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா்கள் முரளிதரன், ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, முதன்மைகல்வி அலுவலர் பாலுமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. மாணவர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Related Tags :
Next Story