வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்தனர்.
ராமநாதபுரம்,
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன.
போராட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நிலஅளவை பயிற்சி வழங்க வேண்டும்.
முறையீடு
கருணை அடிப்படையிலான பணி வரண்முனை அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலை நகரங்களில் கடந்த 19-ந் தேதி பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன்காரணமாக தாலுகா அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பாதிப்பு
மாவட்டம் முழுவதும் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான 179 பெண்கள் உள்பட 514 பேர் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டதால் அரசு பணிகள் மட்டுமல்லாது பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பழனிக்குமார், மாவட்ட செயலாளர் தமீம்ராசா ஆகியோர் கூறியதாவது:-
எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 6-ந் தேதி சேலத்தில் மாபெரும் கோரிக்கை பேரணியும், வருகிற 17-ந் தேதி மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடைபெறும்.
விடுப்பு
சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட அவசர அவசிய பணிகளை கருதி தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தலையாரி களை கொண்டு பயிர்சேத கணக்கெடுப்பு விவர பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Related Tags :
Next Story