திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Jan 2021 7:11 AM IST (Updated: 28 Jan 2021 7:18 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தளி,

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒருசேர எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். 
கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவியில் குளிக்க  ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். 

குளிக்க அனுமதி

கடந்த 2009ம் ஆண்டு பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது குளித்துக் கொண்டிருந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 11 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியானார்கள். அதைத்தொடர்ந்து வனத்துறையின் பராமரிப்பில் இருந்த பஞ்சலிங்க அருவி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 
 கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அருவியில் குளிப்பதற்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும் நிர்வாகம் தடை விதித்தது. தற்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினார்கள். மேலும் கோவில் பராமரிப்பில் இருந்த பஞ்சலிங்க அருவியும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் கோவில் நிர்வாகத்திற்கும் வனத்துறைக்கும் மோதல் போக்கு ஏற்படும் சூழல் உருவானது. அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. 

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் 9 மாதங்களுக்குப் பிறகு அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்து உற்சாகத்தோடு அருவியில் குளித்தும், குடும்பத்தோடு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 

பஞ்சலிங்க அருவி கட்டுப்பாடு பழையபடி கோவில் நிர்வாகத்திடம் செல்லுமா? அல்லது வனத்துறையினர் வசமே இருக்குமா? என்பது ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்பே தெரிய வரும். அருவி யார் பராமரிப்பில் இருந்தாலும் அதில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story