ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க.வினர் திரண்டனர்: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க.வினர் பல்வேறு வாகனங்களில் சென்னை நோக்கி வந்ததால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்,
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதையொட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன், பஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையை நோக்கி திரண்டனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் சென்னையின் நுழைவுவாயிலான செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் நேற்று அதிகாலை முதலே வழக்கத்தை விட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோரும் ஒரே நேரத்தில் குவிந்ததால், காலை 11 வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம், குரோம்பேட்டை பல்லாவரம் பகுதியிலும் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story