திருமுல்லைவாயல் அருகே சோகம்: மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு


திருமுல்லைவாயல் அருகே சோகம்: மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு
x

திருமுல்லைவாயல் அருகே விளையாடி கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில், ஏரியில் பிணமாக மீட்கப்பட்டான்.

ஆவடி, 

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செண்பகம். இவரது கணவர் முனுசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு காளிதாஸ் மற்றும் கணேஷ் (வயது 14) ஆகிய இரு மகன்கள் உண்டு.

கணேஷ் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் செண்பகம் கடந்த 24-ந் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக கர்நாடக மாநிலம் மைசூரு சென்று விட்டார். மகன் காளிதாஸ் அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கணேஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அதன்பிறகு மாலை காளிதாஸ் வீட்டுக்கு வந்தபோது, கணேசை பல இடங்களில் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

பிணமாக மீட்பு

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை அயப்பாக்கம் ஏரியில் கணேஷ் பிணமாக மிதப்பதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, போலீசார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story