தஞ்சை அருகே கார் மோதி வாலிபர் பலி பஸ்சுக்கு காத்திருந்தபோது பரிதாபம்
தஞ்சை அருகே பஸ்சுக்கு காத்திருந்த வாலிபர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள முல்லைக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த புகழேந்தி மகன் ஆதவன் (வயது21). இவர் தஞ்சை அருகே திருமலைசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
கொரோனா காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஆதவன் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்காக படித்து வந்தார்.
சான்றிதழ் பெற வந்தார்
நேற்று முன்தினம் அவர் டி.என்.பி.எஸ்.சி.-யில் பதிவு செய்வதற்கான சான்றிதழ்களை பெற தான் வேலை செய்து வந்த கல்லூரிக்கு வந்தார். அங்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொண்ட அவர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக கல்லூரி வாசலில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த ஆதவன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆதவன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி ஆதவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை புகழேந்தி (53) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story