திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்
திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் மகாலிங்கசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா காரணமாக விழா நாட்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு கோவில் பிரகாரத்தில் மட்டும் நடந்தது. நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய தேரோட்டமும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று தைப்பூசத்தையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில் பஞ்சமூர்த்திகள் காவிரி ஆற்றில் எழுந்தருளினர். அப்போது திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். முன்னதாக திருவாவடுதுறை ஆதீனம் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
போலீஸ் பாதுகாப்பு
தீர்த்தவாரியையொட்டி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
திருவிசநல்லூர்
திருவிடைமருதூர் அருகே உள்ள திருவிசநல்லூரில் சொர்ணபுரி கிராமத்தில் மகா சொர்ண பைரவி சமேத சொர்ண காலபைரவர் சித்தர் பீடம் உள்ளது. இங்கு நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சொர்ணகால பைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது. இதையடுத்து சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவருக்கு மகாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலநது கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பைரவர் உபாசகர் வேம்பு சித்தர் குணசேகர சுவாமிகள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story