செல்போனில் ‘கேம்’ விளையாடியதை தடுத்ததால் விபரீதம்: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போனில் ‘கேம்’ விளையாடியதை தடுத்ததால் விபரீதம்: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2021 3:26 AM IST (Updated: 30 Jan 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தடுத்ததால் மனமுடைந்த பிளஸ்-1 பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம், 

காஞ்சீபுரம் மாவட்டம், உழவர் தெருவை சேர்ந்தவர் பத்மினி. இவரது மகன் மாதவன் (வயது 15). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர் 2-வது தெரு இருளர் பகுதியில் உள்ள உறவினரது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வீட்டில் நேற்று முன்தினம் மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மாதவன் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் மாதவன் காஞ்சீபுரத்தில் இருந்தபோது அடிக்கடி செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் பீர்க்கன்காரணையில் உள்ள உறவினர் வீட்டிற்கு, அனுப்பி உள்ளனர்.

இங்கு வந்தும் செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடிய நிலையில் அவரது உறவினர்கள் செல்போனில் விளையாட கூடாது என போனை வாங்கி கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது

இதனால் மனமுடைந்த மாதவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story