மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
பிளாஸ்டிக் குடோனில் தீ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு எம்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). இவர் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக அந்த பகுதியில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு குடோனில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளஎன பரவி குடோன் முழுவதும் எரிய தொடங்கியது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர் மேட்டுப்பாளையம் போலீசார், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
3 மணி நேரம் போராடி...
தொடர்ந்து குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், பாதுகாப்பு கருதி குடோன் அருகில் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற்றினர். தீ வேகமாக பரவியதால் உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினரும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடோனில் ஏற்பட்ட தீயை சுமார் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.
ரூ.30 லட்சம் பொருட்கள் நாசம்
இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story