சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க. நிர்வாகி
ஆண்டிப்பட்டியில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க. நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார்.
சசிகலாவின் விடுதலையை வரவேற்று, நெல்லை, திருச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதன் காரணமாக அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜா, அ.ம.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் புதுராஜா ஆகியோர் சார்பில் ஆண்டிப்பட்டி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் தமிழ்நாட்டை வழி நடத்த வருகை தரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர், தியாகத்தின் மறுஉருவம், எங்களின் ராஜமாதாவே வருக, வருக என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலாவின் கணவர் நடராஜன், டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜா, மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் புதுராஜா ஆகியோரது புகைப்படங்கள் உள்ளன.
அ.ம.மு.க. நிர்வாகியுடன் இணைந்து, அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் சசிகலாவை வரவேற்று ஒட்டியுள்ள போஸ்டர்களால் ஆண்டிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போஸ்டர் ஒட்டியுள்ள அ.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜா, அ.ம.மு.க.வில் இருந்து விலகி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story