திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் போராட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் நர்சுகளுக்கு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய நர்சுகளுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
கொரோனாவால் பாதித்த நர்சுளுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி பாதிக்காத வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 2-வது நாளாக நேற்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை என மாவட்டம் முழுவதும் நர்சுகள் அரசு ஆஸ்பத்திரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக ஒத்திவைப்பு
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில பொருளாளர் (புறநகர்) கீதா கூறியதாவது:- அரசு நர்சுகள் நீண்ட நாட்களாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டோம். போராட்டத்தின் போது பணிகள் பாதிக்காத வகையில் நோயாளிகளையும் கவனித்துள்ளோம்.
இதற்கிடையே தமிழக அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் நர்சுகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story