தென்காசியில் மாதிரி வாக்குப்பதிவு- கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்


தென்காசியில் மாதிரி வாக்குப்பதிவு- கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Jan 2021 12:06 AM GMT (Updated: 31 Jan 2021 12:06 AM GMT)

தென்காசி மாவட்டத்தில் முதல் கட்ட மாதிரி வாக்குப்பதிவினை, கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

மின்னணு இயந்திரங்கள்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத்தேர்தலில் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கடந்த 24.12.2020 அன்று கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் தேர்தல் பயன்பாட்டுக்காக, முதல் நிலை சரிபார்ப்புக்குப் பின்னர் 3,260 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2, 490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 2,680 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் செயல்பாட்டினை சரிபார்த்திடும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

பரிசோதனை
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் வகையில், 125 இயந்திரங்களைக் கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரம் என அனைத்தும் ஒன்றிணைந்த 125 இயந்திரங்களில், 16 வேட்பாளர்களைக் கொண்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் அமிர்தராஜ், செங்கோட்டை தாசில்தார் ரோஷன் பேகம், அனைத்து வட்டங்களில் உள்ள தேர்தல் துணை தாசில்தார்கள், மாவட்ட தேர்தல் துணை தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story