சசிகலா இன்று ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார்; விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு


சசிகலா இன்று ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார்; விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2021 1:24 AM GMT (Updated: 31 Jan 2021 1:24 AM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்துள்ள சசிகலா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிஸ்சாா்ஜ் செய்யப்படுகிறார். இதனை விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சசிகலாவுக்கு கொரோனா
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை கோர்ட்டில் செலுத்தினார். இதையடுத்து, சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்று கடந்த 27-ந் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த 20-ந் தேதி சசிகலாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், விக்டோரியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து அவர் மீளத்தொடங்கினார்.

விடுதலை
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டு இருந்ததால், சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கி, அவரிடம் கையெழுத்து பெற்று சென்றனர்.

சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் கொரோனா காரணமாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற்றார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். மேலும் சசிகலாவின் உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக சசிகலாவின் ரத்த அழுத்தம், சர்க்கரை பிரச்சினையும் கட்டுக்குள் வந்துள்ளது.

டாக்டர்கள் ஆலோசனை
சசிகலா கொரோனா பாதிப்பு, மற்ற உடல் நல பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்திருப்பதுடன், அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் நேற்று முன்தினம் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது. அதே நேரத்தில் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் விக்டோரியா மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறி இருந்தார்.

இந்த நிலையில், சசிகலாவை ‘டிஸ்சார்ஜ்’ செய்வது குறித்து நேற்று விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது கொரோனா பாதிப்பு, மற்றும் உடல் நலக்குறைவில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதால், அவரை டிஸ்சார்ஜ் செய்வது என்று டாக்டர்கள் முடிவு செய்தார்கள். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து சசிகலாவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்வதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்று ‘டிஸ்சார்ஜ்’
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த சசிகலா நடராஜனின் 10 நாட்கள் சிகிச்சை இன்றுடன் (அதாவது நேற்று) நிறைவு பெற்றுள்ளது. அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 3 நாட்களாக அவர், செயற்கை சுவாச கருவி இல்லாமல் தாமாகவே சுவாசிக்கிறார். கொரோனா விதிமுறைகளின்படி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

டாக்டர்கள், அவருக்கு நடத்திய பரிசோதனையில் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படியும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி (இன்று) மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதால், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் தங்க முடிவு
விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் சசிகலா டிஸ்சார்ஜ் ஆக இருக்கிறார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சசிகலா வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால், அவர் உடனடியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல மாட்டார் என்று தெரிகிறது. பெங்களூருவில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, அதன்பிறகே சசிகலா சென்னைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

அதாவது வருகிற 5-ந் தேதி பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு சென்று விட்டு, அங்கிருந்து சசிகலா சென்னைக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. பெங்களூருவில் உள்ள ஓட்டல் அல்லது உறவினர் வீட்டில் சசிகலா சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Next Story