வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 31 Jan 2021 2:29 AM GMT (Updated: 31 Jan 2021 2:31 AM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2020 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு (பிளஸ்-2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர். 
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை வகுப்பு (பிளஸ்-2) மற்றும் பட்டப்படிப்பு தோச்சி பெற்று பதிவு செய்து 31.12.2020 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை.
பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல் மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை.

தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story