திருவெறும்பூர் பகுதியில் சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டிய அ.தி.மு.க. பிரமுகர்


திருவெறும்பூர் பகுதியில் சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டிய அ.தி.மு.க. பிரமுகர்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:10 AM IST (Updated: 31 Jan 2021 11:10 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் பகுதியில் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர்,
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா கடந்த 27-ந்தேதி தண்டனை காலம் முடிந்து பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். ஆனாலும் அவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்தாலும், தற்போது ரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பதாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தநிலையில் சசிகலாவை வரவேற்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை கவுன்சிலரும், முன்னாள் தொகுதி கழக செயலாளருமான அரசங்குடி சாமிநாதன் என்பவரது பெயரில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டிகளில் "கழகம் காத்திட, பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிட, தியாகத்தலைவி சின்னம்மா அவர்களே... வருக! வருக!" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் சாமிநாதன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். திருச்சியில் தேர்தல் பரப்புரைக்காக திருவெறும்பூர் தொகுதிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்த போது, இவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டிய ஸ்ரீரங்கத்தை சேர்ந்த புலியூர் அண்ணாத்துரை நேற்று முன்தினம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க. பிரமுகர் சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டி உள்ளது அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story