திருச்சி விமான நிலையத்தில் 3¼ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 3 பயணிகள் கைது


திருச்சி விமான நிலையத்தில் 3¼ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 3 பயணிகள் கைது
x
தினத்தந்தி 31 Jan 2021 11:12 AM IST (Updated: 31 Jan 2021 11:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் 3¼ கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சமீபகாலமாக பயணிகள் போர்வையில் வியாபாரிகளும், குருவிகளும் (கடத்தல்காரார்கள்) தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.

அவற்றை சோதனை நடத்தி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வெண்மணி கிராமத்தைச்சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 33) என்ற பயணி தனது உடலில் 799 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாலசுப்பிரமணியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போன்று நேற்று முன்தினம் அபுதாபியில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது மதுரையை சேர்ந்த சுகுமார் (28), திருவாரூரை சேர்ந்த அகமது அலி (32), ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஹ்மதுல்லா (43) ஆகிய 3 பயணிகள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 2½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். 4 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட 3¼ கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 66 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story