ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை


ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை
x
தினத்தந்தி 31 Jan 2021 11:12 AM IST (Updated: 31 Jan 2021 11:12 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை அடுத்த கொல்லம்புதூரை சேர்ந்தவர் கலையரசன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவர் அ.ம.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்தார். 

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் இவர், தனது ஆட்டோவில் உத்தனம்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தார். 

உத்தனம்பட்டி பிரிவு அருகே சென்ற போது, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சாலையோர புதருக்குள் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வெளியே வந்து கலையரசன் ஓட்டி வந்த ஆட்டோவை வழிமறித்தனர்.
வெட்டி படுகொலை
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கலையரசன் சுதாரிப்பதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கலையரசனை ஆட்டோவில் இருந்து வெளியே  இழுத்து போட்டனர். 

பின்னர் சாலையில் தள்ளிவிட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருடைய கைகள், கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாள்வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 


இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பரபரப்பு
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கலையரசன் மீது ஏற்கனவே அடிதடி சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. 


எனவே இந்த வழக்குகளில் தொடர்புடைய யாரேனும் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்தனரா? அல்லது அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கொலை செய்யப்பட்ட கலையரசனுக்கு சத்யபிரியா என்ற மனைவியும், ஒரு வயதில் மகளும் உள்ளனர். ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story