ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சேலம்:
அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தி சேலம், தாரமங்கலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அன்பரசன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாநில சாலை போக்குவரத்து துணைத்தலைவர் தியாகராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதேபோல் எருமாபாளையம், பெரமனூர், தலைமை போக்குவரத்து கழகம் என மாநகரில் உள்ள 7 போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தாரமங்கலம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகி தேவராயன் தலைமை தாங்கினார். குணசேகரன், சேகர், ஜெய்சங்கர், பழனிவேல், முருகன், செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கணேசன் நன்றி கூறினார்.
எடப்பாடி
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, எடப்பாடி அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துசாமி உள்பட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Related Tags :
Next Story