போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 31 Jan 2021 11:15 AM IST (Updated: 31 Jan 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மனித நேய வார நிறைவு விழாவின்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் கண்ணன் பரிசுகளை வழங்கினார்.

விருதுநகர்
விருதுநகரில் மனித நேய வார நிறைவு விழாவின்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் கண்ணன் பரிசுகளை வழங்கினார்.
 நிறைவுவிழா 
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது.
 இதில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் கண்ணன் பேசியதாவது:-
 தமிழக அரசு மனித நேயத்திற்கு முக்கியத்துவம் அளித்து அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
விழிப்புணர்வு 
 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அதை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் நினைவு தினம், மனிதநேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் பலவாறாக பிரிந்து வாழும் நிலையில் அவர்கள் பாகுபாடுகளை மறந்து ஒரு நிலையாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் மனிதநேயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உறுதிமொழி 
 எனவே ஒவ்வொரு வருடமும் மனித நேயம் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும். எல்லோரும் முறையாக கடைபிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.
 அதை உணர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த மனிதநேயத்தை உறுதிப்படுத்தி கிராமத்தில் எல்லோரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொள்வோம்.
 இவ்வாறு கலெக்டர் கூறினார். 
பரிசுகள் 
 மனிதநேய விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி, கவிதை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 
இதில் வெற்றி பெற்ற மாணவிகள் நாகலட்சுமி, ஆர்த்தி, பூஜா, துர்கா தேவி, கீர்த்திகா, மாணவன் மதன் ராஜ் ஆகியோருக்கு கலெக்டர் கண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார். 
மேலும் ஆதிதிராவிடர் விடுதிகளில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முகமது ஜாகிர் உசேன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story