ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீக்குளிக்க முயன்ற டிரைவா்
ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்,
பணியிட மாறுதல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிபவர் ராபர்ட் ராஜசேகர்(வயது 50). இவருக்கும், அதே கிளையில் வேறு பஸ்சில் கண்டக்டராக பணிபுரியும் முருகனுக்கும் கடந்த 18-ந் தேதி திருச்சி மெயின்கார்டு கேட் பஸ் நிறுத்தத்தில் பஸ் புறப்படுவது குறித்து நேரப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி போக்குவரத்து கழக பணிமனை மேலாளர், அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராபர்ட் ராஜசேகர், முருகன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதில் ராபர்ட் ராஜசேகரை லால்குடி பணிமனைக்கு பணியிட மாறுதல் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதையடுத்து நேற்று ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை சென்று பணி செய்துவிட்டு, ஜெயங்கொண்டம் பணிமனைக்கு திரும்பி வந்த ராபர்ட் ராஜசேகரிடம், திருச்சி மேலதிகாரியிடம் இருந்து பணி மாறுதல் ஆணை வந்துள்ளது. அதனை பெற்று செல்லுங்கள் என்று, கிளை மேலாளர் கூறியுள்ளார். அந்த ஆணையை நாளை(அதாவது இன்று) பெற்றுக்கொள்கிறேன் என்று ராபர்ட் ராஜசேகர் கூறியுள்ளார். இதனால், அந்த ஆணையை திருப்பி அனுப்பி விடவா என்று கிளை மேலாளர் கேட்டுள்ளார். இதில் மன உளைச்சல் ஏற்பட்டதையடுத்து, ராபர்ட் ராஜசேகர், அந்த பணிமனையின் கழிவறைக்கு மேலே ஏறி, அங்கு கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதைக்கண்ட காவலாளி செபஸ்டியன், கண்டக்டர் முத்துசாமி உள்ளிட்ட பலர் ஓடிச்சென்று, பெட்ரோல் கேனை பறித்து, அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக பணிமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story