அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சீரான குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நத்தாமூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று உளுந்தூர்பேட்டை - திருக்கோவிலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் அறிந்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் நத்தாமூர் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story