குளித்தலை அருகே கூலிப்படையினரை விரட்டி சென்று கைது செய்த தனிப்படை போலீசார்


குளித்தலை அருகே தனிப்படை போலீசார் சென்ற கார் சேதமடைந்து இருப்பதையும் படத்தில் காணலாம்.
x
குளித்தலை அருகே தனிப்படை போலீசார் சென்ற கார் சேதமடைந்து இருப்பதையும் படத்தில் காணலாம்.
தினத்தந்தி 31 Jan 2021 11:24 AM IST (Updated: 31 Jan 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியில் தங்கியிருந்த கூலிப்படையினரை விரட்டி சென்று தனிப்படையினர் கைது செய்தனர்.

குளித்தலை:
கூலிப்படையினர்
திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் பல்வேறு கொலை சம்பவங்களில் தொடர்புடைய கூலிப்படையினர் சிலர் அய்யர்மலை பகுதியில் தங்கி இருப்பதாக தஞ்சை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
அதன்பேரில் நேற்று அய்யர்மலை பகுதிக்கு தனிப்படை போலீசார் வந்துள்ளனர். குளித்தலை - மணப்பாறை சாலையில் அய்யர்மலை - திம்மம்பட்டி பகுதிக்கு போலீசார் காரில் சென்றுள்ளனர். அப்போது அதேசாலையில் எதிரே காரில் வந்தவர்கள், போலீசார் வருவதையறிந்து, போலீசார் வந்த காரை மோதிவிட்டு தங்களது காரை பின்புறமாகவே வேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த ஒருவர் குதித்து தப்பி அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் ஓடியுள்ளார். அவரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்ததாக கூறப்படுகிறது. 
சினிமா காட்சிபோல துரத்தி கைது
அதேபோல காரை ஓட்டிச்சென்றவர் காரை பின்புறமாக ஓட்டிச்செல்லும்போது கார் சாலையோர பள்ளத்தில் இறங்கியுள்ளது. உடனடியாக அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் காரை ஓட்டிச்சென்ற நபரை காரிலேயே வைத்து மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சினிமாவில் வரும் காட்சியைப்போல நடந்த இந்த சம்பவத்தை இப்பகுதிமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அய்யர்மலை-திம்மம்பட்டி சாலையில் அய்யர்மலை அருகே 10 வீடுகள் உடைய ஒரே அடுக்குமாடி கட்டிடம் உள்ளது.
அந்த கட்டிடத்தில் ஒரு வீட்டில் அய்யர்மலை அருகே உள்ள ஒரு சோலார் கம்பெனியில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் சுமார் 2 வருடங்களாக தங்கி வந்துள்ளார். அண்மையில் தனது ஊருக்கு சென்ற வாலிபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்ததாகவும், அவருடன் 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் தங்கிவந்துள்ளதாக அந்த கட்டிடத்தில் குடியிருக்கும் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர். 
அரிவாள்-கத்தி பறிமுதல்
இதையடுத்து வாலிபர் வசித்து வசித்து வந்த வீட்டிற்குள் தனிப்படை போலீசார் சென்று பார்த்தபோது அங்கு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததை பார்த்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் அந்த வாலிபருக்கு திருமணம் நடக்கவுள்ளதாக அவர் தங்கியிருந்த வீட்டில் கிடைத்த திருமண பத்திரிக்கையை பார்த்தபோது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பல்வேறு கொலை வழக்குகளில் கூலிப்படையாக இருந்தவர்கள் அந்த வாலிபருடன் தங்கியிருந்தது எப்படி, வாலிபருக்கும் அந்த கூலிப்படையினருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?. கூலிப்படையினர் அய்யர்மலையில் தங்கி எவரையேனும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனரா?, கூலிப்படையினர் வைத்திருந்த கார் யாருடையது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
தங்கள் பகுதியில் போலீசார் சிலரை பிடித்த  பின்னரே கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் தங்கள் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Next Story