தூத்துக்குடியில்1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வினியோகம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில்1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வினியோகம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Jan 2021 4:32 PM GMT (Updated: 31 Jan 2021 4:32 PM GMT)

தூத்துக்குடியில்1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வினியோகம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வினியோகம் நேற்று தொடங்கியது. அரசு ஆஸ்பத்திரியில் முகாமை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
சொட்டு மருந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 1221 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நடமாடும் மருத்துவக்குழு மூலம், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக வருபவர்களின் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கலெக்டர் செந்தில்ராஜ்
இந்த பணியில் பொதுசுகாதாரத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்ரி சங்கங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 164 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி கலந்து கொண்டார். தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நடந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விமான நிலையத்தில்...
தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் பயணம் செய்யும் பயணிகளின் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் வகையில், சொட்டு மருந்து முகாம் நடந்தது. முகாமை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விமான நிலைய இயக்குனர் ஜெயராமன் செய்து இருந்தார்.

Next Story