போலியோ சொட்டு மருந்து முகாம்


போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 31 Jan 2021 10:49 PM IST (Updated: 31 Jan 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதனை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தொடங்கி வைத்தார்.

கடலூர், 

போலியோ நோயை தடுப்பதற்காக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வகையில் 31-ந் தேதி (அதாவது நேற்று) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்தது.
இந்த போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் 1, 611 மையங்கள் அமைக்கப்பட்டது.

1,611 மையங்கள்

இதையடுத்து மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டி, சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 1,611 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது. இதில் சுமார் 2 லட்சத்து 44 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

6,444 பணியாளர்கள்

இந்த பணிகளில் சுகாதாரத்துறையுடன் பள்ளிக்கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய்த் துறை, இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என 6 ஆயிரத்து 444 பணியாளர்கள், 196 மேற்பார்வையாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story