கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 31 Jan 2021 6:04 PM GMT (Updated: 31 Jan 2021 6:11 PM GMT)

கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விழுப்புரம், 

கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் பனி அதிகமாக இருந்தது. தற்போது தை மாதம் தொடங்கி 3 வாரங்கள் ஆகிற நிலையில் கடும் பனிப்பொழிவாக இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தை மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. மாலை 5 மணிக்கெல்லாம் தொடங்கும் இந்த பனிப்பொழிவு மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் சாலைகளே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சீரான வேகத்தில் செல்கின்றனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் தினமும் காலை வேளையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மிகவும் பனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிப்பொழிவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் நடைபயிற்சிக்கு செல்வோரின் கூட்டம் சற்று குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சிலர் கடும் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் நெருப்பு மூட்டி அதன் மூலம் சற்று குளிர்காய்ந்து வருவதையும் காண முடிகிறது.

Next Story