திருவையாறில் தியாகராஜர் 174-வது ஆராதனை விழா


தியாகராஜர் சுவாமிகள்.
x
தியாகராஜர் சுவாமிகள்.
தினத்தந்தி 31 Jan 2021 10:14 PM GMT (Updated: 2021-02-01T03:44:03+05:30)

திருவையாறில் தியாகராஜர் 174-வது ஆராதனை விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

தியாகராஜர் ஆராதனை
தியாகராஜர் சுவாமிகள் இசை ஞானியாக திகழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள். தென்னிந்திய இசைக்கு இவர் ஏராளமான சேவைகளை ஆற்றி உள்ளார்.இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.

இன்று தொடங்குகிறது
தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 174-வது ஆண்டாக ஆராதனை விழா நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஆராதனை விழா இந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்படி ஆராதனை விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 5 மணிக்கு 174-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவுக்கு தியாகப்பிரம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். 
சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொள்கிறார்கள். சபா செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார். 

இசை நிகழ்ச்சிகள்
தொடக்க விழாவை தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடைபெறுகிறது. 
விழா பந்தலில் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 9 மணிக்கு அனைத்து இசைகலைஞர்களும் ஒன்று சேர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜர் சிலைக்கு மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. 

ஏற்பாடுகள்
அதை தொடர்ந்து காலை 10 மணிமுதல் 11 மணிவரை இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணி முதல் 8 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. 
இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

Next Story