நெல்லையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

நெல்லையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை,
இந்தியா முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 1,642 மையங்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 669 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பயணம் செய்யும் குழந்தைகளின் வசதிக்காக பஸ் நிலையங்கள், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100 மையங்களும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் என 6 மையங்களும், 2 நடமாடும் மையங்கள் என மொத்தம் 108 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கலெக்டர் விஷ்ணு
நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 669 குழந்தைகள் பயனடைவார்கள். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு பின்னர் இரண்டு நாட்களும் பணியாளர்களால் வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டாலும் இந்த முகாமிலும் கண்டிப்பாக சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்த மையங்களில் மருத்துவ துறை சார்ந்தவர்கள் 442 பணியாளர்களும், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் 60 பேர்கள், சத்துணவு பணியாளர்கள் 1,714 பேர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 1,480 பேர்கள் என மொத்தம் 3,696 பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை டீன் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story