பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் கைக்கடிகாரம்- நகைகள் திருட்டு; மர்மநபர்கள் கைவரிசை


பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் கைக்கடிகாரம்- நகைகள் திருட்டு; மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 1 Feb 2021 1:04 AM GMT (Updated: 2021-02-01T06:34:08+05:30)

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் கைக்கடிகாரம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 8-வது வார்டு நியூகாலனி தெருவை சேர்ந்தவர் குருநாதபிரபு (வயது 37). இவருக்கு திவ்யா என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குருநாதபிரபு, கொரோனா ஊரடங்கின்போது சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக உள்ள திவ்யா, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். குருநாதபிரபு கடந்த 25-ந்தேதி தனது மனைவியை பார்ப்பதற்காக, வீட்டை பூட்டிவிட்டு சமயபுரத்திற்கு சென்று விட்டார்.
திருட்டு
இந்நிலையில் நேற்று காலை குருநாதபிரபுவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் குருநாதபிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் தங்க கைக்கடிகாரம், ¾ பவுன் மோதிரம், ¼ பவுன் தோடு மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story