ஆம்பூர் தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டி?


எல்.கே.சுதீஷ்
x
எல்.கே.சுதீஷ்
தினத்தந்தி 1 Feb 2021 1:23 AM GMT (Updated: 1 Feb 2021 1:23 AM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் நடந்த திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மண்டலத்தில்  12 தொகுதிகள்

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. புதிய உத்வேகத்துடன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழக சட்டமன்ற தொகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்துக்கு நான் தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறேன்.

ராணிப்பேட்டைக்கு அடுத்தப்படியாக ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. தேர்தல் ஆலோசனைக்கூட்டம் இன்று (நேற்று) நடக்கிறது. 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் 2011-ல் நடந்த தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளோம்.

ஆம்பூரில் போட்டி

2006-ல் நடந்த தேர்தலில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்டேன். வேலூர் எனது சொந்த மாவட்டம் என்பதால், எப்போதும் வேலூர் மாவட்டம் மீது எனக்கு ஒரு ஆர்வம் உண்டு. கட்சி தலைவர் விஜயகாந்த் விருப்பப்படி கடந்த மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டேன். தலைவர் மற்றும் தொண்டர்கள் விருப்பப்படி வாய்ப்பு கிடைத்தால் அடுத்த 5 ஆண்டுகள் ஆம்பூரில் என்னை நீங்கள் பார்க்கலாம். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

5 ஆண்டுகள் ஆம்பூரில் என்னை பார்க்கலாம் என்று கூறியிருப்பது, அவர் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

Next Story