மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 2 வாலிபர்கள் பலி நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 2 வாலிபர்கள் பலி நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்
x

நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு திரும்பிய போது, மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

பூந்தமல்லி, 

மேற்கு மாம்பலம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22).இவரது நண்பர் பாலாஜி (23) இருவரும் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் போரூரில் நடந்த இவரது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை பார்த்திபன் ஓட்டினார். பாலாஜி பின்னால் அமர்ந்து கொண்டிருந்தார். ஆற்காடு சாலையில் உள்ள விருகம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த நிலையில், வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புச் சுவரில் இருந்த மின் கம்பத்தின் மீது வேகமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டதையடுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்கள்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்துபோன இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இருவரும் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் வந்ததும், மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் அந்த பகுதியில் முழுவதும் தீப்பொறிகள் எழுந்ததும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை கண்டறிந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு திரும்பிய போது சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story