ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் 3 நாட்கள் உண்ணாவிரதம்


ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் 3 நாட்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 1 Feb 2021 3:22 AM GMT (Updated: 2021-02-01T08:57:07+05:30)

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

திருச்சி, 

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம், செல்வம், மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 5,068 பேர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை 2 ஆண்டுகளாகியும் தமிழக அரசு நிறைவேற்றாமல் மெத்தனபோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் சென்னையில் வருகிற 8, 9, 10 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். அதேநேரம் மாவட்ட தலைநகரங்களில் மற்ற நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். அதன்பிறகும், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story