கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டெடுப்பு

கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே உள்ள முண்டனார் கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்பட்டு வரும் இந்த கோவிலின் நுழைவு வாயிலாக அந்த கல்வெட்டு தூண் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றபோது இந்த கல்வெட்டு பதிக்கப்பட்ட கல்லை நுழைவு வாயில் கேட் அமைப்பதற்காக துளையிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதில் துளையிட முடியாததால் அந்தக்கல் தேவைப்படாது என எண்ணி ஓரத்தில் போட்டு விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் வழிபாடு நடத்த வந்த ஒரு தொண்டு நிறுவனத்தினர், அந்த கல்வெட்டை படம் எடுத்து தொல்லியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த கல்வெட்டில் உள்ளவற்றை படித்த முன்னாள் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ராஜகோபால், ஸ்ரீதரன் ஆகியோர் கூறுகையில், இந்த கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனுடைய ஆட்சி காலத்தை சேர்ந்தது. 910 ஆண்டுகள் பழமையானது. அந்த கல்வெட்டில் கோவிலின் முகப்பில் இருந்த சங்கர நாராயணன் என்ற மண்டபத்தில் ஊர்ச்சபை கூடி கோவிலின் குளம், நிலம், நந்தவனம் ஆகியவற்றுக்கு வரி நிர்ணயம் செய்து அதில் இருந்து வரும் வருவாய் மூலம் கோவில் வழிபாட்டிற்கு செலவு செய்ததாகவும், இந்த கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்களின் எல்லைகள், அதற்கிடையே பாய்ந்த வாய்க்கால்கள் முதற்கொண்டு துள்ளியமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தனர். சோழர் காலத்தில் கோவில்களுக்கு வழங்கப்படும் நிலங்களின் விவரங்கள் எவ்வளவு துல்லியமாக குறிப்பிடப்படுகிறது என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சிறந்த சான்றாக அமைகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கல்வெட்டை தற்போது முண்டனார் கோவில் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பாதுகாப்பாக நிறுத்தி வைக்க தொண்டு நிறுவனம், கோவில் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story






