செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி போராட்டம்


செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி போராட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2021 11:59 AM GMT (Updated: 1 Feb 2021 11:59 AM GMT)

ஆற்காட்டில் மனைவியின் கள்ளக்காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளி ஒருவர் செல்போன் டவர்மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆற்காடு

ஆற்காட்டில் மனைவியின் கள்ளக்காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளி ஒருவர் செல்போன் டவர்மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளத்தொடர்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44) தொழிலாளி. இவரது மனைவிக்கும் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சதீஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு டவுன் போலீசில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வேலூர் மாவட்ட கலெக்டரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் ஆற்காட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள செல்போன் டவருக்கு சதீஷ்குமார் வந்தார்.

செல்போன் டவர்மீது ஏறி போராட்டம்

அங்கு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பதாகையை செல்போன் டவரின் கீழ் வைத்துவிட்டு, 50 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறினார். 

டவர்மீது இருந்தபடியே, நடவடிக்கை எடுக்க வேண்டி கோஷம் எழுப்பினார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்தார். இதைபார்த்த பொதுமக்்கள் போலீசுக்கும், தீயணைப்பு  வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

 இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தீயணைப்பு துறையினர் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரது அக்காவை வரவழைத்து அவருடன் பேச வைத்தனர். இதனால் சமாதானம் அடைந்த சதீஷ்குமார் கீழே இறங்கி வந்தார்.
 
இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story