திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2021 12:18 PM GMT (Updated: 2021-02-01T17:48:12+05:30)

நீண்ட வாரங்களுக்கு பிறகு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

நீண்ட வாரங்களுக்கு பிறகு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. 

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கோரிக்கை மனுக்களை அதிகாரிகளை நேரில் சந்தித்து அளிக்க வந்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்து அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் வைக்கப்படும் மனு பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு கலெக்டர் சந்தீப்நந்தூரி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மனுக்கள் பெற பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் மக்கள் மனுக்களை செலுத்திவிட்டு சென்றனர். 

வெப்பநிலை பரிசோதனை  

இந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுக்கு பின்னர் நீண்ட வாரங்களுக்கு பிறகு  இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. 

கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். மனு அளிக்க வந்த மக்களுக்கு கைகளுக்கு கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டது. 

மேலும் தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இதில் கல்வி உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர். 

கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story