தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி முழு திறனை எட்டியதால் அதிகாரிகள் மகிழ்ச்சி


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி முழு திறனை எட்டியதால் அதிகாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Feb 2021 1:28 PM GMT (Updated: 1 Feb 2021 1:28 PM GMT)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழு உற்பத்தி திறனான 1,050 மெகாவாட் மின்சாரம் இன்று உற்பத்தி செய்யப்பட்டது.இதனால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழு உற்பத்தி திறனான 1,050 மெகாவாட் மின்சாரம் இன்று உற்பத்தி செய்யப்பட்டது.

அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அவ்வப்போது பழுதடைந்து வந்தது. அதனை அதிகாரிகள் சரி செய்து சிறப்பாக மின்சார உற்பத்தியை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனல்மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்உற்பத்தி எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அந்த பழுதை சரி செய்வதற்கான உபகரணங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஓராண்டுகளுக்கு பிறகு அந்த எந்திரம் முழுமையாக சீரமைக்கப்பட்டது.

முழு உற்பத்தி

இதை தொடர்ந்து அனல்மின் நிலையத்தில் உள்ள 5 மின்உற்பத்தி எந்திரங்களும் இயங்க தொடங்கின. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நிலக்கரி ஈரமானதால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த தடைகளை எல்லாம் கடந்து, தூத்துக்குடி அனல்மின்நிலையம் மீண்டும் புதுப்பொலிவுடன் நேற்று மதியம் 2.20 மணிக்கு முழு உற்பத்தி திறனான 1,050 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இதனால் அனல்மின்நிலைய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story