விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்


விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2021 4:34 PM GMT (Updated: 1 Feb 2021 4:34 PM GMT)

திருவண்ணாமலைக்கு செல்ல பஸ் வர தாமதமானதால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, காஞ்சீபுரம், நாமக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரி, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் செல்ல பஸ் வசதி உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கினால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலைக்கு செல்ல நூற்றுக்கணக்கான பயணிகள், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். இவர்கள் இரவு 10 மணியில் இருந்து 12 மணி வரை காத்திருந்தும் திருவண்ணாமலைக்கு செல்ல பஸ் வருவதில் தாமதமானது.

பயணிகள் திடீர் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர், நள்ளிரவு 12 மணியளவில் பஸ் நிலையத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு புறப்பட இருந்த பஸ்சை, பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்து போராட்டம் செய்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து பஸ்கள் வரவழைக்கப்பட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து பயணிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சில் ஏறி திருவண்ணாமலைக்கு பயணம் செய்தனர்.
நள்ளிரவில் பயணிகள் நடத்திய இந்த திடீர் போராட்டம் காரணமாக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story