மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை


மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 1 Feb 2021 4:45 PM GMT (Updated: 2021-02-01T22:17:31+05:30)

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 24), அ.தி.மு.க. இளம்பெண்கள் பாசறை இணை செயலாளராக இருந்தார். இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த கணபதியின் மகன் சூரியமூர்த்தி (36) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கு திருமணம் நடந்த நாள் முதல் அவரது கணவர் சூரியமூர்த்தியும், மாமனார் கணபதியும் சேர்ந்து நகை, பணத்தை பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சூரியமூர்த்தி, போட்டியிட சீட் கேட்டு இருப்பதாகவும், அந்த தேர்தல் செலவுக்காக ரூ.20 லட்சத்தை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கேட்டு தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனிடையே அந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் கார் வாங்குவதற்காக ரூ.2 லட்சத்தை வாங்கி வரும்படி கேட்டு சூரியமூர்த்தி, கணபதி ஆகிய இருவரும் தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த தனலட்சுமி, கடந்த 27.3.2011 அன்று காலை தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தனலட்சுமியின் அண்ணன் இளையராஜா, சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியமூர்த்தி, கணபதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சூரியமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், கணபதியை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சூரியமூர்த்தி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.

Next Story