சட்டமன்ற தேர்தலில்அ.தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் -சரத்குமார்


கூட்டத்தில் சரத்குமார் பேசியபோது எடுத்தபடம்.
x
கூட்டத்தில் சரத்குமார் பேசியபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 1 Feb 2021 5:07 PM GMT (Updated: 1 Feb 2021 5:07 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கோவையில் சரத்குமார் கூறினார்.

கோவை

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கோவையில் சரத்குமார் கூறினார். 

ஆலோசனை கூட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை செல்வபுரத்தில் நடந்தது. 

மாநில முதன்மை துணை பொது செயலாளர் எம்.என்.சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர்கள் உபைது ரகுமான், முத்துராஜ், முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.டி.மணிகண்டன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பட்டாசு வெடித்தும், பூக்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாதாரண இயக்கம் அல்ல

கூட்டத்தில் ஆர்.சரத்குமார் பேசும்போது, சமத்துவ மக்கள் கட்சி சாதாரண இயக்கம் அல்ல. கடந்த 13 ஆண்டு முடிந்து 14 ஆண்டு காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சியை நடத்தி வருகிறேன். மக்கள் சேவைதான் முக்கியம். அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து  கொண்டிருக்கிறோம். ஒரு சீட்டுக்கும், 2 சீட்டுக்கும் நிற்க வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார். 

ராதிகா சரத்குமார் பேசும்போது, கட்சியின் தலைவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் கோவில், மசூதி, ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.

முடிவில் வடக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

பின்னர் ஆர்.சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடுதல் இடங்கள் கேட்போம்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பதை அறிவிப்போம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பட்ஜெட் டில் அதிகநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் பயனளிக்குமா என்பதற்கு காலம்தான் பதில் அளிக்க வேண்டும். 

இன்றைய சூழலில் முருகனின் வேலை தூக்குவது பேஷனாகி விட்டது. அ.தி.மு.க., கூட்டணியில் ஒன்று அல்லது 2 இடங்கள் என சுருக்கிக்கொள்ளாமல் கூடுதலாக இடங்களை கேட்டு பெற்று, தனி சின்னத்தில் போட்டியிடுவோம். 

தனிப்பட்ட விவகாரம்

சசிகலா வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என தற்போது தெரியாது. சசிகலாவின் காரில் அ.தி.மு.க., கொடி பொருத்தப்பட்டு இருந்தது அவர்களது தனிப்பட்ட விவகாரம். ராதிகா சரத்குமார் இந்த தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார். 

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் விரைந்து முடிக்கப்பட வேண்டும், அவினாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் புறவழிச்சாலையுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Next Story