கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை-நகை கொள்ளை


கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை-நகை கொள்ளை
x
தினத்தந்தி 1 Feb 2021 5:53 PM GMT (Updated: 1 Feb 2021 5:53 PM GMT)

குத்தாலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், சாமி சிலை-நகையை கொள்ளையடித்ததுடன், உண்டியலில் இருந்த பணத்தையும் அள்ளிச்சென்றனர்.

குத்தாலம்;
குத்தாலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், சாமி சிலை-நகையை கொள்ளையடித்ததுடன்,  உண்டியலில் இருந்த பணத்தையும் அள்ளிச்சென்றனர். 
சாமி சிலை-நகை கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை மஞ்சள் ஆற்றின் கரைப்பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக வீரமணி என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் பூஜையை முடித்துவிட்டு கோவில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். 
நள்ளிரவில் இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 1 அடி உயரமுள்ள வெண்கலத்தினால் ஆன அய்யப்பன் சிலை, பீரோவில் இருந்த சாமிக்கு அணிவிக்கப்படும் பட்டுப்புடவை மற்றும் 4 கிராம் தங்கத் தாலி ஆகியவற்றை கொள்ைளயடித்தனர். 
பணத்தையும் அள்ளிச்சென்றனர்
பின்னர் அவர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். நேற்று காலை கோவில் பூசாரி வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது  கோவிலில் இருந்து சாமி சிலை, நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து குத்தாலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். 
இதன்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த கோவிலுக்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் குறித்து முதற்கட்ட தகவல் ஏதும் கிடைக்கவில்லை
வலைவீச்சு
இது குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலை, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story