ஆசிரியரை லாரி ஏற்றிக்கொன்ற 8 பேர் ைகது


ஆசிரியரை லாரி ஏற்றிக்கொன்ற 8 பேர் ைகது
x
தினத்தந்தி 1 Feb 2021 7:53 PM GMT (Updated: 2021-02-02T01:23:43+05:30)

பள்ளி ஆசிரியரை லாரி ஏற்றிக்கொன்ற சம்பவத்தில் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 8 பேைர போலீசார் கைது செய்தனர்.

நாட்டறம்பள்ளி

கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி ஆசிரியரை லாரி ஏற்றிக்கொன்ற சம்பவத்தில் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 8 பேைர போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளி ஆசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகர் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.  இவர் கடந்த 28-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பங்களாமேடு அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு,கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை நசுங்கியிருந்தது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தொடர் விசாரணை நடத்தினர். அதில் ஆசிரியர் சிவக்குமாரை கள்ளக்காதல் விவகாரத்தில் கும்பல் லாரியை ஏற்றிக்கொன்றது தெரியவந்தது. 

8 பேர் சிக்கினர்

கொலையாளிகளை பிடிக்க சிவக்குமார் செல்போனுக்கு வந்த அனைத்து அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் இந்த கொலையில் ஈடுபட்டது ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த இளங்கோவன் (42), வெள்ளைசாமி (40), ஜீவகந்திரஹரிகரன் (29), அறிவழகன் (39), ஊத்தங்கரையை சேர்ந்த சத்தியமூர்த்தி (30), இளங்கோ (27), வேம்பரசன் (21), கணேசன் (35) ஆகியோர் என்பது ெதரியவந்தது.

சிவக்குமார் தன்னுடன் வேலைபார்க்கும் ஊத்தங்கரையை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். சிவக்குமாரை, ஆசிரியையின் கணவர் இளங்கோவன் கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை.
இதனால் சிவக்குமாரின் கால்களை துண்டிக்க இளங்கோவன் மற்ற 7 பேருக்கும் ரூ.1 லட்சம் கொடுத்து அழைத்து வந்துள்ளார்.

லாரிைய ஏற்றினர்

சம்பவத்தன்று ஆசிரியர் சிவக்குமார் மோட்டார்சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த 8 பேரும் சிவக்குமாரை மோட்டார்சைக்கிளில் இருந்து இறக்கி காரில் கடத்தி ராமகிருஷ்ணாபுரம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கை, கால்களை கட்டி லாரியை ஏற்றுவதற்காக ஓட்டி வந்துள்ளனர். அப்போது கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழப்பதற்காக சிவக்குமார் உருண்டு புரண்டபோது அவரது தலையில் லாரி ஏறி இறங்கியது. இதில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். அதன்பின் 8 பேரும் தப்பி விட்டனர். இந்த நிலையில் சிவக்குமாரின் செல்போன் அழைப்புகள், அதில் அழைத்தவர்களின் உரையாடல்களை ஆய்வு செய்து 8 பேரையும் போலீசார் பிடித்தனர். 

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Next Story