புஞ்சைபுளியம்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து- காரையும் சேதப்படுத்திவிட்டு தப்பிய மர்மநபர்கள் 4 பேருக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை கத்தியால் குத்தி காரை சேதப்படுத்திவிட்டு தப்பிய மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 45). இவர் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி ரமா பிரபா.
கந்தவேலும், ரமாபிரபாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே சுள்ளிப்பாளையம் வந்து அங்கு தங்கியிருந்து வருகிறார்கள். பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்தவர் ஸ்ரீ ஜெயன் (42). இவர் கந்தவேலின் வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கார் மீது தாக்குதல்
கந்தவேல் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள இரும்பொறை கிராமத்தில் நண்பரை பார்த்துவிட்டு தனது காரில் ரமா பிரபா, ஸ்ரீ ஜெயன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு சுள்ளிப்பாளையம் திரும்பி கொண்டிருந்தார்.
வீடு அருகே சென்றபோது முகமூடி அணிந்த மர்மநபர்கள் 4 பேர் அங்கு சென்று காரை மறித்தனர். பின்னர் மர்மநபர்கள் 4 பேரும் காரின் கண்ணாடியை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர். இதில் கண்ணாடி நொறுங்கி சேதம் அடைந்தது.
கத்திக்குத்து
அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் கந்தவேலையும், ஸ்ரீஜெயனையும் குத்தினர். இதனால் ரமா பிரபா பயத்தில் சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். பின்னர் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.
4 பேருக்கு வலைவீச்சு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். ஸ்ரீ ஜெயனுக்கு பலருடன் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் முன்விரோதம் காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story