கோவில்பட்டி: விவசாயியை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு


கோவில்பட்டி: விவசாயியை தாக்கி மோட்டார் சைக்கிள்,  செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 11:58 AM GMT (Updated: 2 Feb 2021 11:58 AM GMT)

கோவில்பட்டியில் விவசாயியை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்து சென்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் விவசாயியை தாக்கி  மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்து சென்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ கல்லூரணியை சேர்ந்தவர் முத்து சீதாராமன் (வயது 36). விவசாயியான இவர் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். 

கோவில்பட்டி - எட்டயபுரம் சாலை தெற்கு திட்டங்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது, 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர். பின்னர் அவர்கள், முத்து சீதாராமனை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். 

இதுகுறித்து முத்து சீதாராமன் கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார், கோவில்பட்டி புதுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முத்து சீதாராமனுடையது என்று தெரியவந்தது. 

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த கார்த்திக் (25), ஜே.ஜே.நகர் புதுகிராமத்தை சேர்ந்த சூர்யா (24), மாயாண்டி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.2 ஆயிரம் மீட்கப்பட்டது.

Next Story