சாத்தான்குளம்: அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


சாத்தான்குளம்: அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 12:41 PM GMT (Updated: 2 Feb 2021 12:41 PM GMT)

சாத்தான்குளத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. 

வட்ட தலைவர் தேவசமாதானம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ஜேசுமணி முன்னிலை வகித்தார். செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். போராட்டத்தை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட பொருளாளர் ஜெயபாண்டியன் தொடங்கி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் ஜெயபால் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கோரிக்கைகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் மற்றும் வனத்துறை காவலர், ஊராட்சி எழுத்தர் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். 

அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கு செலவு தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. 

தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் பாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பால சுந்தர கணபதி, ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஜோசப் துரைராஜ், ஓய்வுபெற்ற நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகேசன், ஓய்வு பெற்ற ஒன்றிய ஆணையாளர் இஸ்ரவேல், ஓய்வுபெற்ற தாசில்தார் நடராஜன், ஓய்வுபெற்ற தீயணைப்பு துறை அதிகாரி டேனியல், ஓய்வு பெற்ற மின்சார வாரிய அதிகாரிகள் செல்வகுமாரி, அருள் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்ட பொருளாளர் ரூபவதி நன்றி கூறினார்.

Next Story