மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அறுவடை செய்யும் விவசாயிகள்


மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அறுவடை செய்யும் விவசாயிகள்
x
தினத்தந்தி 2 Feb 2021 3:27 PM GMT (Updated: 2 Feb 2021 3:27 PM GMT)

உச்சிப்புளி அருகே பல கிராமங்களில் மழை நீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனைக்குளம், 

உச்சிப்புளி அருகே பல கிராமங்களில் மழை நீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த  மாதம் 2-வது வாரத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மேலாக இடைவிடாமல் பெய்த தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கியது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள மானாங்குடி, கடுக்காய்வலசை, சூரங்காட்டு வலசை, சின்னுடையார்வலசை, நாரையூரணி, ரெட்டையூரணி, தாமரை குளம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிபோயின.

மூழ்கிய நெற்பயிர்கள்

இந்தநிலையில் உச்சிப்புளியை சுற்றி உள்ள பல கிராமங்களில் மழை நீரில் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிர்களை விவசாயிகள் தண்ணீரில் இறங்கி மிகவும் சிரமப்பட்டு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிர்கள் முழுவதும் ஈரமாக உள்ளதால் அதை சாலையோரம் வைத்து வெயிலில் நன்கு காயவைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

கடுக்காய் வலசை, சுரங்காட்டுவலசை உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் தண்ணீரில் இறங்கி மழை நீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்களை மிகவும் கஷ்டப்பட்டு அறுவடை செய்துவருகின்றனர். 

இதுபற்றி மானாங்குடியை சேர்ந்த விவசாயி அசோகன் கூறியதாவது:- 

இந்த ஆண்டு மானாங்குடி மற்றும் கடுக்காய் வலசை பகுதிகளில் 10 ஏக்கரில் நெல்பயிர் பயிரிட்டுள்ளேன். 

நிவாரணம்

ஆனால் தொடர்ச்சியாக பெய்த மழையால் 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. தண்ணீரில் கூலிக்கு ஆட்களை வைத்து நெற்பயிர்களை அறுவடை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story