பாளையங்கோட்டை அருகே முதியவர் அடித்துக்கொலை


பாளையங்கோட்டை அருகே முதியவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2021 11:08 PM GMT (Updated: 2021-02-03T04:38:18+05:30)

பாளையங்கோட்டை அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தகராறு 

பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் தக்கையா தெருவை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 70). இவருடைய பேரன் இர்பான் (16). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவருக்கும், அவருடன் படிக்கும் ஒரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் இரவு சர்புதீன் வீட்டுக்கு சிறுவர்கள் சிலர் வந்தனர். அவர்கள் இர்பானை திடீரென்று தாக்கினர். இதை கண்ட சர்புதீன் மற்றும் குடும்பத்தினர் தாக்குதலை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். இதில் சர்புதீனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கீழே விழுந்தார்.

முதியவர் சாவு 

உடனடியாக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இவரது குடும்பத்தில் காயம் அடைந்த மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  

பேச்சுவார்த்தை 

அதே நேரத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் பர்கிட் மாநகரில் குவிந்தனர். அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், இறந்த சர்புதீன் குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story